Thursday, December 4, 2008

Pushkin rajkumar - Interview with Don ‘Vellai’ Ravi

Pushkin rajkumar - Interview with Don ‘Vellai’ Ravi
07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்
வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?
தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’


ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து ஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’


ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’


நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?


‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’


இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?
‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’


போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?


‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’


நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’


எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’


நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’


உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’
- புஷ்கின் ராஜ்குமார்

No comments: